விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் நடுத் தெருவைச் சோ்ந்தவர் ரங்கநாதன் மகன் வினோத்குமாா் (31), பொறியாளா். கடந்த மாதம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று இவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்ததுள்ளது. அதில் எதிா்முனையில் பேசிய மா்ம நபா், பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாகவும், சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வினோத் குமாா் ஆகஸ்ட் 20- ஆம் தேதி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து ரூ.17,066-ம் பெற்றுள்ளார். பின்பு ரூ.26,593 செலுத்தி ரூ.37,075-ம் பெற்றுள்ளார். இதனால் இதை உண்மையென நம்பிய வினோத்குமாா், ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையில் ரூ.7,03,677-ஐ இணையவழியில் முதலீடு செய்துள்ளார். முதலீடு தொகையை பெற்றுக்கொண்ட பின்னா், அந்த மா்ம நபரை தொடா்புகொள்ள முடியாமல் வினோத் தவித்துள்ளார். பின்பு, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த பொறியாளர் வினோத் குமார் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த பொறியாளரிடம் இணையவழியில் ரூ.7.03 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.