முகப்பு குற்றச்செய்திகள் திண்டிவனத்தில் பணத் தகராறு: கஞ்சா வழக்கில் சிக்கவைக்க முயன்ற 3 பேர் கைது

திண்டிவனத்தில் பணத் தகராறு: கஞ்சா வழக்கில் சிக்கவைக்க முயன்ற 3 பேர் கைது

by Tindivanam News

திண்டிவனத்தில் பணம் திரும்பக் கேட்ட பெண்ணை போலி கஞ்சா வழக்கில் சிக்கவைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பகுதியில் வசித்து வருபவர் ஜான். அவரது மனைவி சந்திரிகா (38), சென்னை ஹவுசிங் போர்டில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறிய சென்னை நாகராஜிடம் ரூ.2 லட்சம் வழங்கியிருந்தார். அதேபோல், திண்டிவனத்தைச் சேர்ந்த பலரிடமிருந்து தொகை பெற்ற அவர், மொத்தம் ரூ.50 லட்சம் வரை நாகராஜிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பல மாதங்கள் கடந்தும் வீட்டுமனை வாங்கித் தராததுடன், பெற்ற பணத்தையும் திருப்பி வழங்காமல் நாகராஜ் காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், தனது பணத்தை திருப்பிக் கேட்டு சந்திரிகா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜான் வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திண்டிவனம் டவுன் போலீசுக்கு மர்ம அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் வீட்டில் சோதனை நடத்தியபோது, கருப்பு நிறக் கவரில் சுமார் 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சந்தேகம் ஏற்பட்டதால், அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, இரு நபர்கள் வீட்டின் வளாகத்துக்குள் கஞ்சா பொட்டலங்களை வீசி விட்டு சென்றது பதிவாகியிருந்தது.

  செஞ்சி சென்ற அரசு பேருந்தை கல்லூரிக்கு திருப்பிய மாணவர்கள்

பின்னர் சந்திரிகாவிடம் விசாரணை நடத்தியபோது, நாகராஜிடம் பணம் தொடர்பான பிரச்சினை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. கேமராவில் பதிவான நபர்களை அடையாளம் கண்டு விசாரித்ததில், அவர்கள் மீது ஏற்கனவே சென்னை பகுதியில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (32), அயனாவரம் பட்டாச்சாரி தெருவைச் சேர்ந்த ஜெகன் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், நாகராஜின் தூண்டுதலின் பேரில் சந்திரிகாவை கஞ்சா வழக்கில் சிக்கவைக்க திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும், இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த நாகராஜ் (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole