2024-25ம் கல்வி ஆண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.புதுச்சேரி மத்திய அரசு மருத்துவகல்வி நிறுவனமான ஜிப்மரில் (JIPMER) பிஎஸ்சி நர்சிங் படிப்பில் பெண்கள்-85, ஆண்கள்-9 என 94 இடங்களும், பிஎஸ்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகள் – 87 இடங்களும் என மொத்தமாக 181 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2024-25ம் கல்வி ஆண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மர் இணையதளத்தில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இப்பாடப்பிரிவுக்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி வரும் அக்.24ம் தேதி மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. இதற்கு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவர்களின் பட்டியல் வரும் நவம்பர் 8ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். நவ.25ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.