செஞ்சி ஒன்றியம் சங்கராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் உருது உயர்நிலைப் பள்ளியில் செஞ்சி வட்டார அளவிலான கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா மன்ற போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்த போட்டிகள் திண்டிவனம் கல்வி மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளை சார்ந்த சுமார் 1100 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் இலக்கிய மன்றம், அறிவியல் மன்றம், சிறார் திரை மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளித்துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி விருந்தினர்களை வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் மற்றும் செஞ்சி ஒன்றிய குழுத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். இந்த பரிசளிப்பு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.