85 ஆண்டுகால தமிழ் பணியை பாராட்டிச் சிவஞானபாலய சுவாமிகள் கல்லூரிக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டிவனத்தில் அமைந்துள்ள கம்பன் கழகம் அறக்கட்டளையின் சிறப்புத் தலைவரும், புதுச்சேரி அமைச்சருமான லட்சுமி நாராயணன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது, “கடந்த 1938ஆம் ஆண்டில் பொம்மபுர ஆதீனம் 18ஆம் பட்டம் குருமகா சன்னிதானத்தின் அருள் ஆசியுடன் மயிலத்தில் முருகன் செந்தமிழ் கழகத்தின் சார்பில் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கல்லூரி நிறுவப்பட்டது.
இந்த கல்லூரி தமிழ் வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பை வழங்கி உள்ளது. இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் கல்லூரி முதல்வர்களாகவும், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி பேராசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும், தமிழ் ஆசிரியர்களாகவும், தமிழ் அறிஞர்களாகவும், இலக்கியவாதிகளாகவும் திகழ்ந்து வருகின்றனர். இவ்வாறு 85 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் தமிழ் பணியை பாராட்டும் விதமாக சிவஞான பாலய சுவாமி கல்லூரிக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி காலை கம்பன் கலை அரங்கத்தில் ‘வேரை விழுதுகள் வணங்கும் விழா’ எனும் பாராட்டு விழா நடக்க இருக்கிறது.
இந்நிகழ்வை புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்களும், திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மயிலம் பொம்முபுர ஆதீனம் 20ஆம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞான பாலய ஸ்வாமிகள் ஆசி வழங்குகிறார். மேலும் இந்த பாராட்டு விழாவில் புதுச்சேரி முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.