அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டு பொருட்கள் வழங்குவது வழக்கம். இவ்வாறு வழங்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் தரமற்றது என்ற புகார் எழுப்பப்பட்டது. இந்த புகாருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சமீபத்தில் விளக்கம் அளித்தார். நவம்பர் 14’ம் தேதி அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கு கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
1. இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்:
இந்த வருடம் குழந்தைகள் தின விழா மாவட்ட மற்றும் வட்டார அளவில இல்லாமல் மாநில அளவிலும் நடத்தப்பட்டது. அதில் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்படுகின்றது. இதனால் பள்ளி வேலை நாட்கள் குறைந்து கற்றல் மற்றும் கற்பித்தல் பணி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை சரி செய்யும் விதமாக இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களே முடிவு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமற்ற விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் கொடுத்த விளக்கம்:
அரசு பள்ளிகள் சிலவற்றில் தரமற்ற விளையாட்டுப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக வெளியான செய்தியை முதல்வர் அவர்களே என்னிடம் தெரிவித்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட பொருட்களை என்னுடைய அறையில் வைத்து நானே ஆய்வு செய்தேன். இது சம்பந்தமாக தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வருடா வருடம் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.25000 விளையாட்டு பொருட்கள் வாங்கிக் கொள்ள அரசு சார்பில் வழங்கப்படுகின்றது. சில பள்ளிகள் விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்தாமலும் இருக்கின்றன. இதற்கு காரணம் அந்த பள்ளியில் மாணவர்கள் அந்த விளையாட்டை விளையாடுவதில்லை என்று கூறுகின்றனர். ஆக, இனிமேல் வட்டாரத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் பயன்படுத்த ஏற்ற முறையில் விளையாட்டுப் பொருட்கள் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.