ஒரு சட்டசபை தொகுதிக்குள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள, ஐந்து லட்சம் வாக்காளர்களுக்கு, அவர்கள் எங்கு ஓட்டளிக்க விரும்புகின்றனர் என்ற விபரம் கேட்டு, பதிவு தபால் அனுப்ப, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த அக்டோபர், 27 முதல், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது; டிச., 9 வரை இப்பணி நடக்கும். கடந்த 26ம் தேதி வரை, பெயர் சேர்க்கக் கோரி, 9.14 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
மொத்தமாக, 15.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
இவற்றை ஆய்வு செய்து, தகுதியான நபர்களின் பெயர்களை சேர்க்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர, ஒருவரின் பெயர் மற்றும் புகைப்படம், ஒரே சட்டசபை தொகுதிக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அவை தனியாக மென்பொருள் உதவியுடன் பிரித்து எடுக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில், மாநிலம் முழுதும் ஐந்து லட்சம் வாக்காளர்கள் பெயர்கள், ஒரே தொகுதியில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த வாக்காளர்களுக்கு அவர்களின் பெயர், எந்தெந்த பாகங்களில் எல்லாம் உள்ளது என்ற விபரத்துடன், அவர்கள் எந்த இடத்தில் ஓட்டளிக்க விரும்புகின்றனர்.
எதை நீக்க விரும்புகின்றனர் என்ற விபரத்தை தெரிவிக்கக் கோரி, மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில், பதிவு தபால் அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பதிவுத் தபாலில், அவர்கள் விபரம் தெரிவிக்க, இ – மெயில் முகவரி, அஞ்சல் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் குறித்த விபரம், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட வாக்காளரை சந்தித்தும் விபரம் சேகரிப்பர்.
வாக்காளர் விருப்பத்தின் அடிப்படையில், ஒரு இடம் தவிர, மற்ற இடங்களில் இருந்து, அவரது பெயர் நீக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன.
இது தவிர, லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், தேர்தல் பணியாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.