பல எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2019’ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. பின்பு குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களால் ஒப்புதலும் வழங்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)
இந்த சட்டத்தின் மூலம் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து 2014’ம் வருடம் டிசம்பர் 31’ம் தேதிக்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்த முஸ்லீம்கள் அல்லாத அந்த நாட்டு மதச் சிறுபான்மையினருக்கு, அதாவது இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் விடுபடுவதைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக டெல்லியில் நடந்த போராட்டத்தில் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இருந்தபோதிலும், இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்த மத்திய அரசு, கடந்த மார்ச் மாதம் 11’ம் தேதி செயலில் கொண்டுவந்தது.
இந்நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் படி, விண்ணப்பித்திருந்த 14 பேருக்கு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தற்போது அவர்களுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா அவர்கள் விண்ணப்பதாரர்களை வாழ்த்தி, குடியுரிமை சான்றிதழின் அமசங்களை விளக்கி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். குடியுரிமை சான்றிதழை நன்றி கூறி கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர்.