இந்தியாவில் ஜி.எஸ்.டி., (GST) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலில் உள்ளது. சமீபகாலமாக ஜி.எஸ்.டி., தொடர்பாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க வரி அமல்படுத்தப்பட்ட சட்டப்பிரிவுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் 281 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை சஞ்சிவ் கன்னா, எம்.எம். சுந்தரேஷ், பீலா திரிவேதி அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தன. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது, “எல்லா ஜி.எஸ்.டி., வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைது நடவடிக்கை அவசியமற்றது. குற்றம் தொடர்பாக நம்பகமான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும். மேலும், வழக்கு விசாரணையை முடிக்க கைது செய்யப்பட வேண்டும் என சட்டம் கூறவில்லை, அது சட்டத்தின் நோக்கமும் கிடையாது.
எனவே, நம்பகமான ஆதாரங்கள் மற்றும் உறுதியான ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை செய்ய வேண்டும். சட்டம் சுதந்திரத்தை உயர்ந்த பீடத்தில் வைத்துள்ளது. அதை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது. ஆக, ஜி.எஸ்.டி., சம்மந்தமான எல்லா வழக்கிலும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.
மேலும், ஜி.எஸ்.டி., சட்டப்பிரிவில் உள்ள கைதுக்கான காரணங்கள் மற்றும் குற்றம் நடந்திருக்கக் கூடும் என நம்பும் காரணங்கள் குறித்து நீதிமன்றம் ஆராயும். நாட்டில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் மிக கடுமையாக நடந்த சம்பவங்களும் உள்ளன, அதேபோல் வரி செலுத்துவோர் மோசடியில் ஈடுபட்ட வழக்குகளும் உள்ளன. தீர்ப்பு வழங்கும் போது அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும்.” இவ்வாறு தெரிவித்தனர்