கோடைக்காலம் வழக்கத்திற்கு முன்பாகவே இந்த வருடம் துவங்கியுள்ளது. வெயிலின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது. மேலும் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது என்பது சகஜம்தான், ஆனால், இந்த வருடம் பெங்களூருருவில் முன்னெப்போதும் இல்லாதவகையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தமுறை மக்களுக்கு மட்டுமில்லாமல், கர்நாடக அரசு அமைச்சர்களும், ஏன் முதலமைச்சர் அரசு இல்லமான கிருஷ்ணா, துணை முதல்வர் அரசு இல்லம் என அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இதனால், குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்களின் பிரச்னையைத் தீர்க்க மாநகர குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- முதற்கட்டமாக, பெங்களூருவில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கட்டுப்பாடுகளை மீறி தண்ணீரை பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தடையை தொடர்ந்து மீறினால் 5 ஆயிரம் அபராதத்துடன் தினமும் 500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களுருவில் ஏற்பட்டுள்ள இந்த கடும் குடிநீர் பஞ்சத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடையின் துவக்கமே இப்படி உள்ளது என்றால், இன்னும் கோடைகாலத்தில் எப்படி இருக்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.