சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதி மக்கள் சுமார் 30 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலை சுற்றல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அருகே மலைமேடு பகுதியில் வசித்து வரும் மக்கள் சுமார் 30 பேருக்கு நேற்று வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர், தனியார் மருத்துவமனையில் சிலர் என மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அந்த தண்ணீரைப் பருகியதால் உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதையடுத்து, அமைச்சர் தா.மோ. அன்பரசன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், “குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை. உணவில் ஏதோ கலந்திருப்பது போன்று தெரிகிறது. குடிநீரில் எதாவது கலந்திருந்தால் 300 பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மக்களுக்கு அக்கறை வேண்டும்” என்று கூறியிருந்தார்.