முகப்பு அரசியல் திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு – பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு – பக்தர்கள் அதிர்ச்சி

பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

by Tindivanam News

ஆந்திராவில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி, ஆளும் ஜெகன் மோகன் அணியை வீழ்த்தி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. தற்போது, அம்மாநிலத்தின் முதல் அமைச்சராக சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக அமராவதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது , “ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டுகூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். தற்போது தூய நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலில் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்த சூழலில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி தனது எக்ஸ் வலைதளத்தில், “சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தி உள்ளார். திருப்பதி கோவில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது. எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறவோ மாட்டார்கள். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்வாரா..?” என்று பதிவிட்டிருந்தார்.

  ஒரு சட்டசபை தொகுதிக்குள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு

தற்போது, திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில், திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole