இன்னும் ஒரு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று பாஜக பாமக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக கட்சி பொது செயலாளர் வடிவேல் இராவணன் , நாடாளுமன்றத் தேர்தலில் பாமக பாஜக’வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் என உறுதிசெய்தார்.
இந்நிலையில் இன்று, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாஜக – பாமக இடையேயான தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தாகிறது. இந்த தொகுதி பேச்சுவார்த்தை முடிவு செய்ய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலர் ராமதாஸ் இல்லத்திற்கு இன்று காலை வந்திருந்தனர். உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக பொதுச்செயலாளர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் இருந்தனர்.
அதன்படி பாமக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமக பாஜக’வுடன் கூட்டணி அமைத்தது அதிமுக’விற்கு பின்னடைவாகவே கூறப்படுகிறது. இன்னும் தேமுதிக யார் பக்கம் செல்வார்கள் என்பது முடிவாகவில்லை. தேமுதிக கட்சியை கூட்டணியில் சேர்க்க பாஜக, அதிமுக என இரண்டு கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன.