காந்தி ஜெயந்தி அன்று காந்தி சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவிக்கவில்லையே, மதுவிலக்கு கொள்கையில் திருமாவளவன் கொள்கையும் காந்தி கொள்கையும் வேறு வேறு கொள்கையா!? என்று திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.
மது ஒழிப்பு விஷயத்தில் திருமாவளவன் அவர்களது கொள்கையைப் பற்றி அவர் கூறினாரே ஒழிய, திருமாவளவன் தனிப்பட்ட விதத்தில் மது அருந்துவாரா இல்லையா என்பது பற்றி எல்லாம் அவர் கூறவே இல்லை.
ஆனால் இதை தவறாக திரித்து உளுந்தூர்பேட்டையில் நடந்த மாநாட்டில் திருமாவளவன் பேசும் பொழுது, நான் மது அருந்துபவன் என்ற அர்த்தத்தில் தமிழிசை அவர்கள் பேசியுள்ளார். அவர் மது அருந்த மாட்டார் என்று நான் நினைக்கிறேன். அவரைப் போலவே நானும் மது அருந்துவதில்லை. என்று கொச்சையான முறையில் அரசியல் நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவர் எப்படி பேசுவாரோ, பெண்களின் மாண்பை மதிக்கத் தெரிந்த ஒருவர் எப்படியெல்லாம் பேச மாட்டாரோ, அப்படி பேசி இருக்கிறார் திருமாவளவன் !
திருமாவளவன் அவர்களும், அவரது கட்சியும் எப்பொழுதும் பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் நடந்து கொள்கிறது. உதாரணமாக உளுந்தூர்பேட்டை மாநாட்டில் ஒரு பெண் காவல் ஆய்வாளர் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டார். விசிக தொண்டர்களால் தள்ளிவிடப்பட்டார். அந்த கும்பல் கூட்டத்திற்கு நடுவே அந்த பெண் காவல் ஆய்வாளர் தரையில் விழுந்து உட்கார்ந்து இருந்த காட்சிகள் தமிழக மக்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல கடந்த வாரம் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் சேர்ந்த பாஜகவை சார்ந்த ஒருவர் தன்னுடைய 15 வயது மகளுக்கு பக்கவாதம் சிகிச்சை அளிப்பதற்காக, குடும்பத்துடன் ஆந்திராவிற்கு சென்று திரும்பும் வழியில், புவனகிரியில் தேநீர் அருந்துவதற்காக தன்னுடைய வாகனத்தை நிறுத்தி உள்ளார். அங்கு உச்சபட்ச குடிபோதையில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த முல்லை மாறன் தலைமையிலான கும்பல், குடும்பத்துடன் வந்திருக்கிற ஒருவர் என்று கூட பார்க்காமல் அந்த மனிதரை தாக்கி, பல பேர் கூடி அவரது மனைவியும் மோசமான வார்த்தைகளால் திட்டி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவரது பெண்ணை அவமானப்படுத்தும் வகையில் கொச்சையாக பேசி, காரில் இருந்த பாஜக கொடியை கிழித்து எரிந்துள்ளனர்.
பொதுவாக பிரச்சனை செய்ய நினைப்பவர்கள் கூட ஒருவர் குடும்பத்தோடு இருக்கும்போது பெண்கள் இருக்கிறார்களே என்று ஒதுங்கி செல்வார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதையே advantage ஆக எடுத்துக்கொண்டு பிரச்சனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. உளுந்தூர்பேட்டை மாநாட்டில் கூட ஆண் காவலர்கள் தாக்கப்படவில்லை. பெண் காவலர் தான் தரையில் தள்ளப்பட்டார். அதே மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் அவர்கள், தமிழகத்தில் இருந்து சென்று இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக வீற்றிருந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஒரு பெண் என்றும் பாராமல், இப்படியாக ஒரு மோசமான விமர்சனத்தை வைத்திருக்கிறார் என்று சொல்லும் பொழுது, விடுதலை சிறுத்தைகளை பொருத்தவரை பெண்களை அவமானப்படுத்துவது அவர்களை ஒரு vulnerable target ஆக நினைத்து டார்கெட் செய்வது, இவையெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய அடிப்படை சித்தாந்தமாக இருக்கிறதோ என்கிற கேள்வியை எழுப்புகிறது.
ஏற்கனவே, ‘எங்களிடம் சரக்கு இருக்கு, மிடுக்கு இருக்கு, அதனால் பெண்கள் எங்களை நோக்கி வருகிறார்கள்’ என்று தமிழ் சமூகத்தால் மறக்க முடியாத ‘வடு’க்களை ஏற்படுத்திய வார்த்தைகளை உதித்தவர்தான் இந்த திருமாவளவன்!
ஒரு பெண்ணைப் பார்த்து, உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நான் நம்புகிறேன் என்று கிண்டலாக சொல்லுவது , நம்முடைய தமிழ்ச் சமூகத்தை பொறுத்தவரை , நாகரீகம் உள்ள, தமிழ் பண்பாடு அறிந்த எவரும் சாதாரணமாக பேசி விடுகிற வார்த்தை அல்ல. இந்த விஷயத்தில் திருமாவளவன் தன்னுடைய தவற்றை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்.