வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள 200 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இவ்வாறு தேர்தல்களில் பல கட்சிகளும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அசாம் மாநிலத்தில் ஆளுநராக உள்ள குலாம் சந்த் கட்டாரியா ராஜஸ்தான் தேர்தலில் பிரச்சாரம் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா பிரச்சாரம் செய்திருந்தார். ஒரு மாநிலத்தின் ஆளுநர் பதவியில் உள்ள ஒருவர் மற்றொரு மாநிலத்தில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் தெரிவித்துள்ளன. அசாம் மாநில ஆளுநராக உள்ள குலாப் சந்து கட்டரியா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.