ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி , பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2000 தருவதாக அறிவித்திருக்கிறது. இதற்கு பதிலடி தரும்விதமாக பாஜக கட்சி, நாங்கள் ரூ.2100 தருகிறோம் என்று அறிவித்துள்ளது. இதனால் ஹரியானா தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள், வேட்பாளர் பட்டியல் என தேர்தலை சந்திக்க அரசியல் காட்சிகள் மும்முரமாக வேலை செய்து வருகின்றன. இந்நிலையில்தான், காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. இதில் மிக முக்கியமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம், காலியாக உள்ள 2 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும், சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின்படி, ரூ.25 லட்சம் மதிப்பில் இலவச சிகிச்சை, வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகள் உள்ளிட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தொடர்ந்து இன்று பாஜக தேர்தல அறிக்கையை வெளியிட்டது. மத்திய அமைச்சரும் பாஜக-வின் தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
ஹரியானா மாநில தற்போதைய முதலமைச்சர் சைனி, பாஜக மாநில தலைவர் மோகன் லால் படோனி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னாள் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம், லாடோ லட்சுமி திட்டத்தின்கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2100 உதவித்தொகை, 10 தொழில் நகரங்கள் அமைக்கப்படும், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆக, காங்கிரஸ் கட்சி மகளிருக்கு ரூ.2000 உதவி அறிவித்த நிலையில், அதைப் பின்பற்றி பாஜக ரூ.100 அதிகரித்து ரூ.2100 ஆக வழங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.