பாராளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கட்சிக்கு அடுத்த சிக்கல். கடந்த 2006 முதல் 2001 திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதிவு வகித்தவர் ஐ. பெரியசாமி அவர்கள். இவர் பொறுப்பில் இருந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உதவியாளராக இருந்த கணேசன் என்பவருக்கு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக ஐ. பெரியசாமி மீது அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்கு பதிவுசெய்யப்ட்டது.
இந்த வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ’க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்குள் எம்.பி – எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
மேலும், தினந்தோறும் இந்த வழக்கின் விசாரணையை நடத்தி ஜூலை மாததிற்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.