இந்திய தேர்தல்களமே பாராளுமன்றத் தேர்தல் காரணமாக சூடுபிடித்து பல அரசியல் சார்ந்த வழக்குகள், நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போடப்பட்டிருந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால், பாஜக தலைவர் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
என்ன நடந்தது – வாங்க பார்ப்போம்:-
சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்த மனுவில், “யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிறிஸ்துவ மதத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இரு மதத்திற்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் அவருடைய கருத்து உள்ளது. அதனால், அந்தக் கருத்தை நீக்கி அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்காக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, அண்ணாமலை அவர்கள், இந்தச் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்குத் தரக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த பிப்.8ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அண்ணாமலையின் முறையீடு மனுவை ரத்து செய்து வழக்கை சேலம் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய அண்ணாமலை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீடு மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் ஆகியோர் முன்னிலையில் இன்று (பிப்.26) விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆக, பாஜக தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு வழங்கியுள்ளது.