முகப்பு அரசியல் திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சிப் பெண் கவுன்சிலர்கள் மோதல்

திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சிப் பெண் கவுன்சிலர்கள் மோதல்

by Tindivanam News

திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நேற்று மதியம் 12 மணியளவில் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் பானுமதி, மேலாளர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அன்றைய தினம் அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றதால் பல கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டம் துவங்கியதும், தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி, “மயானக் கொள்ளை நடைபெறும் நாளில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? வேறு நாளில் நடத்த முடியாதா?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள், நகரில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நகராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகள் காலக்கெடுவில் முடிவடையாமல் நீடிப்பது குறித்து ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

21வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தீபா, தமது வார்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடப் பணிகள் நீண்ட காலமாக முடிவடையாமல் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர் ரம்யா ராஜா எதிர்ப்பு தெரிவித்து, “பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது எவ்வாறு முடியாமல் உள்ளது என்று கூறலாம்?” எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  காதலனை மணந்த ஒரே வாரத்தில் கல்லூரி மாணவி இறப்பு

இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீபாவுக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் லதா சாரங்கபாணி மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர் திருமகள் உள்ளிட்டோர், ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் கவுன்சிலர் தீபா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். அதன்பின் ரம்யா ராஜாவும் வெளியே சென்று தீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகரித்தது. சிலர் கமிஷனரை சூழ்ந்து கேள்வி எழுப்பினர். இதற்கிடையில் நகர மன்ற தலைவரும் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக, பிற்பகல் 1 மணியளவில் நகர மன்ற கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பாதியிலேயே முடிவுற்றது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole