முகப்பு அரசியல் எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா?

எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா?

மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்

by Tindivanam News

பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் போதையை ஒழிக்க வேண்டும்; போதைப் பழக்கங்களில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலியில், ‘’தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கது தான். ஆனால், அது முரண்பாடுகளின் மொத்த உருவம் ஆகும்.

ஒருபுறம் போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்கிறார்; ஆனால், செல்லும் பாதை நெடுகிலும் போதைப்பொருட்களின் விற்பனை தலைவிரித்தாடுகிறது; மாணவர்களைக் கூட மதுக்கடைகள் வா, வா என வரவேற்கின்றன. போதையை வெறுப்பவர்களைக் கூட போதைக்கு அடிமையாகும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை உறுதி செய்திருக்கும் தமிழக அரசு, போதையில் பாதையில் செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுப்பதை விட இரட்டை வேடம் இருக்க முடியாது.

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் குடும்பத்தில் ஒருவனாக, தந்தையாக வேண்டுகோள் விடுப்பதாக கூறியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அவருக்கு ஒரே ஒரு வினா, எந்த தந்தையாவது மகன்கள் குடிக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பார்களா? ஆனால், நீங்கள் தமிழ்நாட்டில் 4774 மதுக்கடைகள், 1500 மதுக்கடைகள், 20 ஆயிரம் சந்துக் கடைகளை திறந்து வைத்திருக்கிறீர்களே? மகன்கள் செல்லும் பாதையில் முள்கள் கூட கிடக்கக் கூடாது என்பது தான் தந்தையர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், தமிழகத்தின் தந்தையாக திகழ வேண்டிய நீங்கள், எல்லா பாதைகளிலும் கஞ்சாவில் தொடங்கி எல்லா போதைப் பொருட்களும் விற்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கிறீர்களே? இது நியாயமா?

  எச்சரிக்கை ! அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்

போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்று கூறியிருக்கிறீர்கள். உங்களின் இந்த விருப்பமும், அக்கறையும் உண்மையென்றால் உடனடியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள், போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள். இல்லாவிட்டால் தமிழ்நாட்டு இளைஞர்கள் செல்லும் பாதை இருட்டாகத் தான் இருக்கும்; அதைத் தவிர்க்க முடியாது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole