வளமான இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் படைப்பாற்றலை வளர்ப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச அறிவியல் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 2015ஆம் ஆண்டு முதல் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் எட்டு முறை நடைபெற்றுள்ளது. இந்த வருடம் ஒன்பதாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஜனவரி மாதம் 17ஆம் தேதி துவங்கி 20ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. மாணவர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் அறிவியல் துறையை சேர்ந்த பலரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச அறிவியல் விழாவின் கருப்பொருள் “அமிர்தகால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மக்கள் தொடர்பு”. இந்த அறிவியல் திருவிழாவில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் கருத்தரங்குகள், பேச்சாளர்களுடலான கலந்துரையாடல்கள், கண்காட்சிகள், போட்டிகள், பட்டறைகள், அறிவு பகிர்வு நடவடிக்கைகள் என பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன.