விண்வெளித் துறையில் சாதிக்க உலகநாடுகள் பலவும் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. மேலும் ஒரு சில நாடுகள் மட்டுமே குறிப்பிடத்தக்க சாதனைகளும் செய்துள்ளன. இந்நிலையில், இதுவரை விண்வெளிக்கு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என மூன்று நாடுகள் மட்டுமே மனிதர்களை அனுப்பியுள்ளன.
தற்போது, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்தியாவும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த ஆய்வுத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4 பேரில் தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர். சென்னையில் அஜித் கிருஷ்ணன் 1982ம் ஆண்டு ஏப்ரல்19ம் தேதி பிறந்தவர். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்று பின்பு விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாளைப் பரிசாகப் பெற்றுள்ளார்.
மேலும், 2023 ஜூன் 21ல், இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்ட அஜித் கிருஷ்ணன், பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும், இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார்.
அஜித் கிருஷ்ணனுக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் சூ-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாக்குவார், டோர்னியர், An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டிய அனுபவம் கொண்டவர். மேலும், வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளார்.
விண்வெளிப் பயணத்திற்கு தேர்வாகியுள்ள அஜித் கிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.