கடந்த ஆண்டு சபரிமலை மண்டலா மற்றும் மகர விளக்கு காலத்தில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டத்தால் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். இதற்கு முழுக்காரணமாக அதிகமான பக்தர்களை ஒரே நாளில் தரிசனம் செய்ய அனுமதிப்பதுதான் எனக் கூறப்பட்டது. உதாரணமாக, சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் என இரண்டு வசதிகளும் இருந்ததால் , ஆன்லைன் புக்கிங் செய்யாதவர்களும் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம் என பம்பையில் குவிந்தனர். இதனாலேயே, கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கேரள அரசும், சபரிமலை தேவசம்போர்டும் திணறின.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்த வருட சபரிமலை மண்டலகால பூசைக்கு, கடந்த வருடம் போல நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, ‘ஸ்பாட் புக்கிங் வசதி’ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் 80,000 பேருக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்க கேரள அரசும், தேவசம் போர்டும் கூட்டாக முடிவு செய்துள்ளன.
தினசரி முன்பதிவு, 80,000 ஆக தொடர, ஆன்லைன் புக்கிங் வசதியை மூன்று மாதங்களுக்கு முன்பே துவங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் மகரவிளக்கு சீசனில் கூட்ட நெரிசல் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு தரிசனம் செய்ய பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருகிலிருந்த காடுகளிலும், மலைகளிலும் சிக்கிய பக்தர்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே ஊர் திரும்பினர்.
இந்த சிக்கல்களை தவிர்க்க நவம்பர் மாதம் துவங்க உள்ள மண்டல, மகர விளக்கு கால சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை முழுமையாக ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் முடிவு செய்துள்ளன. இதை நடைமுறைப்படுத்தவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பிரசாந்த் கூறினார்.