இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை ரமலான் ஆகும். இந்த பண்டிகையின் ஒரு மாதத்தின் முன்பிலிருந்து இஸ்லாமியர்கள் நோன்பு விரதம் கடைபிடிப்பது வழக்கம். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதைப் பொறுத்தே ரமலான் மாதம் துவங்குவதை அறிவிப்பார்கள். நேற்று முன்தினம் சவுதி அரேபியாவில் பிறை தெரிந்தது, அதனால் சவுதி மக்கள் ரமலான் நோன்பு இருக்க துவங்கினர்.
தற்போது, சென்னையில் பிறை தெரிந்ததாக தலைமை காஜி அறிவித்துள்ளார், அதனால் இஸ்லாமியர் அனைவரும் மகிழ்ச்சியுடன் ரமலான் நோன்பு விரதத்தை கடைபிடிக்க துவங்கியுள்ளனர். இஸ்லாமியர்கள், நோன்பு இருக்கும் காலத்தில், சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு, மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் விரதமிருந்து நோன்பினை கடைப்பிடிப்பார்கள்.
மேலும், இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றி கொள்ளுமாறு இஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்நிலையில், இந்தியத் தலைவர்கள் பலரும் ரமலான் மாத துவக்கத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள், புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பை கொண்டு வரட்டும்” என்று கூறியிருந்தார்.