நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வருட உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரை இறுதிச் சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதுவரை இந்திய அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி நான்காவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி எட்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது.
மேலும் கடந்த 2003ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா படுதோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது. அதற்கு பழித்தீர்க்கும் விதமாக இந்த ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ள இறுதிப் போட்டிக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் இந்த போட்டியைக் காண வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இறுதி போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு உலக கோப்பையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளதாக கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வெற்றி கேப்டன்களான கபில் தேவ், மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் போட்டியைக் காண வர அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் வருகைத் தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.