நிகழ்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. அதிலும் VIRTUAL REALITY எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் பார்வையாளர்களை ஒரு புதிய உலகத்திற்கே பயணம் செய்ய வைக்கிறது. இந்த மெய் நிகர் தொழில்நுட்பம் சினிமா வீடியோ கேம் வலைத்தளங்கள் போன்று பல்வேறு இடங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் மெய்நிகர் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெட்டாவர்ஸ் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தது. இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ கேமில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இங்கிலாந்தில் வழக்கு பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மெட்டாவர்ஸ் தொழில்நுட்பம் மெய்நிகர் தொழில்நுட்பத்தை சேர்ந்ததே ஆகும். இந்த தொழில்நுட்பத்தை அதற்கான பிரத்தியேக கண்ணாடி மற்றும் ஹெட்செட்டுகளுடன் இணைத்து பயன்படுத்தலாம். இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மெட்டாவெர்ஸ் வீடியோ கேம் ஒன்றை விளையாடி உள்ளார். இந்த விளையாட்டுக்களில் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அவதார் எனப்படும் டிஜிட்டல் கதாபாத்திரம் கொடுக்கப்படும். இந்நிலையில் சிறுமியின் கதாபாத்திரம் கொண்ட அவதாரை வேறு சில அவதாரங்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் கூறுகையில் சிறுமிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பில்லை என்றாலும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலமாக ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு என இந்த வழக்கு கூறப்படுகிறது. இது தொடர்பாக மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்பாடுகளுக்கு எங்கள் தளத்தில் இடமில்லை பயனர்களின் பாதுகாப்பிற்கு பல பிரத்தியேக வசதிகள் உள்ளன என்று தெரிவித்திருந்தார்.”