கடந்த சில நாட்களாக வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் மரக்காணம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளம் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் வேதாரண்யம், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக மரக்காணம் தான் உப்பு உற்பத்தியில் மூன்றாவது இடம் வகிக்கிறது. மரக்காணம் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த உப்பளங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் உப்பு உற்பத்தி பெருமளவில் பாதிப்பு அடைந்து வருகிறது. மேலும், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மரக்காணத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் இங்கு உப்பு உற்பத்தி தொழில் முழுவதுமாக பாதிப்படைந்துள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட உப்புக்கள் கரையோரம் கொட்டித் தார்பாய் மூலம் மூடப்பட்டிருந்தது. அவையும் தொடர்மழை காரணமாக நீரில் மூழ்கி பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது “மரக்காணம் பகுதியில் நீண்ட நாட்களாக உப்பு பாதுகாப்பு கிடங்கு அமைக்க கோரிக்கை வைத்து வருகிறோம். மழைக்காலங்களில் இதுபோன்று சேதங்கள் ஏற்படுவதால் உப்பின் விலை உயர்த்தப்படுகிறது. இதுவே உப்பு பாதுகாப்பு கிடங்கு இருந்தால் உப்பின் விலை ஏற்றம் இருக்காது.
மேலும், மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதால் உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டுகோள் வைத்தனர்.”