மரக்காணம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயத்தையே முதன்மையானத் தொழிலாக மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடுகள் வளர்ப்பு, பசு மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பு ஆகியத் தொழில்களை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் வருடா வருடம் பருவ மழை துவங்கும் முன்பு விவசாயிகள் வளர்க்கும் இந்த கால்நடைகளை மர்ம நோய்கள் தாக்கி பெரும் சேதத்தை உருவாக்குவதாக அந்த பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். இந்த வருடமும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு அங்குள்ள கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது.
இந்த நோய் எளிதில் அடுத்தடுத்த கால்நடைகளுக்கு பரவி வருகிறது. இந்த நோய் தாக்கிய சில கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் வருத்தத்தில் உள்ளனர். நோய் தாக்கிய கால்நடை சரியாக உணவு உட்கொள்ள இயலாது. அதனால் டியூப் போன்ற சாதனத்தை கால்நடையில் வாயில் நுழைத்து உணவு அளிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக கால்நடை மருத்துவரை அணுகிய போது அவர்கள் கூறியதாவது, “இந்த நோய் மரக்காணம் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதற்கு சரியான மருந்து மற்றும் தடுப்பூசி என்பது கிடையாது. அதனால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை உடனடியாக தனிமைப்படுத்தி, அதற்கு சத்தான உணவு அளித்து குணமடைய செய்ய வேண்டும். இருப்பினும், தற்போது அம்மை நோய் தடுப்பாக ஒரு டானிக் மருந்து வந்துள்ளது. இந்த டானிக் மருந்தையே நாங்கள் கால்நடைகளுக்கு கொடுத்து வருகிறோம்.” மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.