இசைஞானி என்றாலே அது இளையராஜா’தான். இளையராஜா பாடாத பாட்டு இல்லை, போடாத மெட்டு இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் பல மொழித் திரைப்படங்களுக்கு இளையராஜா சிறந்த பாட்டுக்களை பாடி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அவருடைய வாழ்க்கை வரலாறு சினிமா படமாகத் தயாராகிறது. இசைஞானி இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிகை, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜா வாழ்க்கை கதையாக உருவாகும் இந்த படத்திற்கு, இளையராஜாவே இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜைகள் சென்னையில் நடந்தது.
திரைப்படத்தின் துவக்க விழாவில், உலகநாயகன் கமல்ஹசன், இசைஞானி இளையராஜா, நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், கங்கை அமரன், சந்தானபாரதி, ஆர்.வி உதயகுமார், வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்தனர்.
‛அன்னக்கிளி’ படத்தில் துவங்கி, இசை உலகின் ராஜா என பெயர் எடுத்தவர் ‛இசைஞானி’ இளையராஜா. இதுவரை 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள நிலையிலும், இன்று வரை பல படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு பிசியாகவே உள்ளார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இதற்குமுன்பு ராக்கி, சாணிக்காயிதம் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் வாழ்க்கை படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.