ஆண்டுதோறும் புதுச்சேரியில் உள்ள உணவகங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கலைகட்டும். இந்த விழாக்களில் உணவகங்களில் தயாரிக்கப்பட்ட கேக்குகள், அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்படும். அதன்படி இந்த வருடமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அதன் துவக்கமாக பிரபல நட்சத்திர ஓட்டலில் 20 லிட்டர் மதுபானங்களில் 50 கிலோ அளவிலான பழ வகைகள் மற்றும் முந்திரி, பாதாம் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளும் ஊறலில் ஊறவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தயாரிப்பு பணியில் கலந்து கொண்ட நட்சத்திர உணவகத்தின் உணவு தயாரிப்பாளர் கூறியதாவது, “புதுச்சேரியில் உள்ள ஆனந்தா இன் உணவகம் இந்த முறை 1200 கிலோ அளவில் கேக் தயாரிக்க உள்ளதாக கூறினார். இந்த கேக்கில் பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சைகள் மற்றும் ஒயின் மதுபானமும் சேர்க்கப்பட உள்ளதாக கூறினார்.” 45 நாட்களுக்கும் மேலாக ஊறவைத்து தயாரிக்கப்படும் இந்த கேக் புதுச்சேரி பகுதியில் மிகவும் பிரபலம்.