புதுச்சேரி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக உப்பனாறு வாய்க்கால் பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2008ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடந்தது. பின்பு ரூபாய் 3.5 கோடி அளவிற்கு ஃபைல் பவுண்டேஷன் பணிகளை மட்டும் முடித்துவிட்டு கட்டுமான நிறுவனம் வேலையை நிறுத்திக் கொண்டது. பின்பு 2014ஆம் ஆண்டு ஹட்கோ வங்கியில் ரூபாய் 37 கோடி கடன் பெற்று மாநில அரசின் 7.5 கோடி நிதியுடன் மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது. மதுரையில் இருந்து இயங்கும் கே.எஃப் கட்டுமான நிறுவனம் இந்த பணியை ஏற்று துவங்கியது. பணி துவங்கிய பின் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கட்டுமான பணிகள் தடைப்பட்டன. கட்டுமான நிறுவனம் முடித்த பணிகளுக்கு ரூபாய் 5 கோடி வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறைக்கு எதிராக கட்டுமான நிறுவனம் வழக்கு பதிவு செய்து, ரூபாய் 13 கோடி வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது. ஆனாலும் பொதுப்பணித்துறை இந்த தொகையை வழங்காமல் காலம் கடத்தி வந்தது.
இதனால் நீதிமன்றத்தில் தீர்ப்பு நிறைவேற்று மனு கட்டுமான நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவரசன், ஏற்கனவே இருந்த தொகையுடன் வட்டியை சேர்த்து ரூபாய் 15.39 கோடியை கட்டுமான நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை வழங்க உத்தரவிட்டார். இருப்பினும், இந்த பணத்தையும் பொதுப்பணித்துறை வழங்காததால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பெயரில் புஸ்சி தெருவில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம், வருவாய்த் துறை அதிகாரிகள் மூலமாக ஜப்தி செய்யப்பட்டு, அதற்கான நோட்டீஸ் அலுவலக வாசலில் ஒட்டப்பட்டது.