பழங்குடியினரை கௌரவிக்கும் விழா நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் உள்ள பழங்குடியின மக்களை கௌரவிக்கும் ‘கௌரவ விழா’ கொண்டாட்டத்தை பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த விழா காணொளி மூலம் நாடு முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த கௌரவ தின விழா ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி அவர்கள், பேரவைத்தலைவர் செல்வம், புதுச்சேரி அமைச்சர்கள், அரசு செயலர்கள், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், துறை இயக்குனர் என பல அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் வாழும் பழங்குடியின மக்களை கௌரவிக்கும் விழாவாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு அழைத்து வரப்பட்ட பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தது அங்கு பலருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம் விசாரித்த போது அழைத்து வந்தவர்கள் எங்களை இங்கேதான் உட்கார வைத்தார்கள் என பதில் அளித்தனர்.
இதனை அடுத்து அங்கிருந்த அதிகாரிகள் நாற்காலிகள் கொண்டு வந்து அதில் அமரும்படி பழங்குடியின மக்களை கூறினார்கள். இருப்பினும் அரங்கில் இருந்தோர் அனைவரும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட பழங்குடியின விடுதலை இயக்க தலைவர் ஏகாம்பரம் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த பழங்குடியின மக்களுக்கு எந்தவித நலச் சலுகைகளும் செய்வதில்லை. உதாரணமாக இந்த விழாவிற்கு சுமார் மூன்று லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியில் பழங்குடியின மக்கள் 4 பேருக்கு வீடு கட்டி தந்திருக்கலாம். முத்ரா கடன் மூலம் எந்த பழங்குடியின மக்களுக்கும் நல உதவி செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். பழங்குடியின மக்களை சேர்ந்த சில பெண்களும் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அதனை அடுத்து அங்கு வந்த ஆளுநர் தமிழிசை அவர்கள் ஏகாம்பரம் அவர்களை அழைத்தார் இருப்பினும் ஏகாம்பரம் மக்களை அழைத்துப் பேசுங்கள் என்னிடம் பேச எதுவும் இல்லை என செல்ல மறுத்தார். பின்பு, விழாவிற்கு வந்திருந்தோர் ஆளுநரிடம் சென்று தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களை ஆளுநர் சமாதானப்படுத்தி அமர வைத்தார்.