முகப்பு புதுச்சேரி ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி புதுச்சேரியில் விற்க முயற்சி

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி புதுச்சேரியில் விற்க முயற்சி

7 வாலிபர்களை துரத்தி பிடித்த காவல்துறை

by Tindivanam News
police arrested youngsters who smuggled ghanja from andhra to sell

புதுச்சேரி முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதலியார்பேட்டை அனிதாநகர் பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக 2 கார்கள் நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தது. இதனால் அந்த காரை போலீசார் கண்காணித்தனர்.சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரின் அருகில் சென்றனர். அப்போது காரில் இருந்தவர்கள் ஒரு பொட்டலத்தை அவர்களிடம் கொடுத்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால் காரில் இருந்தவர்கள் ஓடத் தொடங்கினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று 7 பேரை பிடித்தனர். இதில் ஒருவர் தப்பியோடிவிட்டார்.

இதனையடுத்து காரில் போலீசார் நடத்திய சோதனையில் 45 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த அசாருதீன் (25), ஷாருக்கான் (25), ராஜூவ்காந்தி (28), அப்துல்கலாம் (19), மனோஜ்குமார் (22), புதுச்சேரி நைனார்மண்டபத்தை சேர்ந்த செந்தில்குமார் (23), அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் (34) என்பது தெரிய வந்தது. தப்பியோடியவர் கேரளாவை சேர்ந்த சேட்டா என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கார், மோட்டார் சைக்கிள், 7 செல்போன் மற்றும் 45 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய கேரளாவை சேர்ந்த சேட்டா என்பவர் கஞ்சாவை மொத்தமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கி வந்து தமிழகம், புதுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனது கூட்டாளிகளுடன் விற்று வந்துள்ளார். சேட்டாவுடன் விழுப்புரம் அசாருதீனுக்கு பழக்கம் இருந்துள்ளது.

  புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

இதனால் சேட்டா மூலம் அசாருதீன் கஞ்சாவை வாங்கி வந்து அதனை புதுவையை சேர்ந்த அலெக்ஸ், செந்தில்குமார் ஆகியோரிடம் கொடுத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.இதனிடையே, சேட்டா விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கிலோ கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்துள்ளார். அதில் 5 கிலோ வை சென்னையில் கொடுத்துள்ளார். புதுவையில் உள்ள அலெக்ஸ் 2 கிலோ கஞ்சா கேட்டதால் காரில் கொடுக்க வந்துள்ளார்.

அவருடன் காரில் விழுப்புரத்தை சேர்ந்த மற்றவர்களும் வந்துள்ளனர். இவர்கள் புதுவையில் கஞ்சாவை கொடுத்துவிட்டு, திண்டிவனம், கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு கொடுத்துவிட்டு, இறுதியில் திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மொத்த வியாபாரியான சேட்டாவை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole