முகப்பு தமிழ்நாடு சீசிங் ராஜா – நேற்று கைது, இன்று என்கவுன்ட்டர்

சீசிங் ராஜா – நேற்று கைது, இன்று என்கவுன்ட்டர்

தமிழ்நாட்டில் தொடரும் ரௌடிகளின் என்கவுன்ட்டர்

by Tindivanam News

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன், ரவுடி புதூர் அப்பு உட்பட 29 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மாறி மாறி காவலில் எடுத்து செம்பியம் தனிப்படைப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, ஆற்காடு சுரேஷின் நண்பரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசீங் ராஜாவை தீவிரமாக தேடி வருவதாகவும், அவர் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டன.

இப்படியான சூழலில்தான், ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை நேற்று காலை கைது செய்தனர் சென்னை தனிப்படை போலீசார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தன.

  ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

இரண்டு மாதங்களாக தேடப்பட்டு வந்த சீசிங் ராஜா கைதானது இந்த வழக்கில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான், கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார், இன்று காலை நீலாங்கரை பகுதியில் வைத்து விசாரித்துள்ளனர். அப்போது, காவல்துறையினரை தாக்கிவிட்டு சீசிங் ராஜா தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதில் போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் 2 தோட்டாக்கள் பாய்ந்து சீசிங் ராஜா உயிரிழந்துள்ளார்.

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்படும் சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 32க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஆயுத தடைச் சட்டம், ஆட்களை கடத்தி தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை வாங்குவது என பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பாக, 5 முறை குண்டர் தடுப்பு காவலிலும் அடைக்கப்பட்டவர்தான் சீசிங் ராஜா. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஜூலை 14ம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், 2வது ஆளாக இன்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார் சீசிங் ராஜா.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole