முகப்பு தமிழ்நாடு 6 மாதங்களில், 1000 மதுக்கடைகளை மூடி- மதுவிலக்கு கொண்டுவரலாம்

6 மாதங்களில், 1000 மதுக்கடைகளை மூடி- மதுவிலக்கு கொண்டுவரலாம்

படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைபடுத்துங்கள்

by Tindivanam News

பாமக கட்சி தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி போராடி வருகிறது. இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியதாவது, “தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு எள்ளளவும் இல்லை; ஆனால், உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்; அதனால் தான் மதுக்கடைகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த மக்கள் மீது பழிபோடுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மக்கள் மீட்க முடியாத அளவுக்கு மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள் என்பதைப் போலவும், மதுக்கடைகளை மூடி விட்டால் அவர்களால் வாழவே முடியாது என்பதால் தான் மதுக்கடைகளை தொடர்ந்து நடத்துவது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அமைச்சர் முத்துசாமி முயன்றிருக்கிறார். திமுகவைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களின் நலனுக்காக மதுக்கடைகளை நடத்திக் கொண்டு, அதை நியாயப்படுத்துவதற்காக மக்களை மீளாக் குடிகாரர்களாக சித்தரிப்பதையும், இழிவுபடுத்துவதையும் அனுமதிக்க முடியாது.

மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினாலும் அதனால் தமிழ்நாடு அழிந்து விடாது. மது கிடைக்காவிட்டால் மக்கள் மாண்டுவிட மாட்டார்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிமுக ஆட்சியில் 40 நாட்களுக்கு மேலாகவும், திமுக ஆட்சியில் 14 நாட்களும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. அமைச்சர் கூறுவதைப் போல அப்போது எதுவும் நடந்து விடவில்லை. மாறாக, மது குடிக்கும் வழக்கம் கொண்டவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தார்கள். உண்மையில் மது கிடைக்காத அந்தக் காலம் தான் பொது மக்களின் பொற்காலம்.

அரசாங்கம் இலக்கு வைத்து மதுவை விற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மது குடிப்பது தீங்கு என்பதை மக்களுக்கு உணர்த்தி மதுவின் பிடியிலிருந்து மக்களை மீட்க கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். இது கடமை தவறிய பேச்சு ஆகும். மதுவின் தீமைகளை மக்களுக்கு விளக்கிக் கூறும் பணியை பா.ம.க. தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால், மதுவிலக்குத் துறையை நடத்தும் தமிழக அரசு தான் மதுவின் தீமைகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்வதற்கு பதிலாக, எங்கெல்லாம் மது விற்பனை குறைகிறதோ, அங்கெல்லாம் மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளை கட்டாயப்படுத்துகிறது.

  வாய் வித்தை வேண்டாம், செயலில் காமியுங்கள் - நடிகர் விஜய் அறிவுரை

மது விற்பனை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கோடி வருவாய் ஈட்டும் தமிழக அரசு, மதுவின் தீமைகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்ய ஆண்டுக்கு ரூ.4 கோடி மட்டும் தான் ஒதுக்குகிறது. இது பத்தாயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவு ஆகும். இந்த நிதி கூட முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதில் பத்தில் ஒரு பங்கு கூட பயனுள்ள வகையில் செலவிடப்படுவதில்லை. மதுவின் தீமைகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது; அவர்கள் அரசின் மது வணிகத்துக்கு வாடிக்கையாளர்களாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கருதுகிறது. இதை விட பேரவலம் இருக்க முடியாது.

மதுக்கடைகள் மூடப்பட்டால் அண்டை நாட்டு மது தமிழகத்திற்குள் வந்து விடும், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதெல்லாம் மது வணிகத்தை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் அல்ல. அண்டை மாநில மது வருவதையும், கள்ளச்சாராயத்தைத் தடுப்பதும் மாநில அரசின் அடிப்படைக் கடமைகள். அந்தக் கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அரசு பதவி விலக வேண்டுமே தவிர, அதையே காரணம் காட்டி மதுவணிகத்தை நடத்தக் கூடாது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசின் அரசியலமைப்புச் சட்டக் கடமை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில் உடனடியாக 1000 மதுக்கடைகள், அதன்பின் 6 மாதங்களுக்கு தலா 1000 மதுக்கடைகள் வீதம் மூடி திமுக ஆட்சிக்காலம் முடிவதற்குள் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole