முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகமெங்கும் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டிடங்கள் திறந்து வைத்தும் மற்றும் அறிவிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், மயிலாடுதுறை மாவதில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்குபெறவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் ரயில் மூலம், மனைவி துர்கா ஸ்டாலினுடன் மயிலாடுதுறை வந்தார்.
துர்கா ஸ்டாலின் அவர்களின் சொந்த ஊரானா திருவெண்காட்டில் தங்கி ஓய்வெடுத்தார். துர்கா ஸ்டாலின் திருவெண்காட்டில் உள்ள புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற இந்திர விழாவில் கலந்துகொண்டார்.
பின்பு, காலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்காக ரூ.114.48 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் ரூ.655.44 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவு செய்யப்பட்ட கட்டடங்களுக்கான திறப்பு விழாவை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனோடு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 12,653 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது, பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் என்னும் மீனவரின் சேதமடைந்த படகு காரணமாக அவருக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட ரமேஷ், சிறிதுநேரத்தில் மீண்டும் அந்தக் காசோலையை முதல்வரிடம் திருப்பி கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் காசோலையை வாங்கவில்லை, அதன் பிறகு அருகில் நின்ற அமைச்சர் எ.வ.வேலுவிடம் கொடுத்தார், அவரும் வாங்கவில்லை. பின்னர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் கொடுக்க, அதை வாங்கிய அவர் அருகில் இருந்த அன்பில் மகேஸிடம் கொடுத்தார். மீனவர் ரமேஷின் இந்த செயலால் மேடையின் கீழ் நின்ற தி.மு.க-வினர் ஆத்திரமடைந்தனர். பின்னர் கீழே இறங்கிய ரமேஷை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அழைத்து சென்றனர்.
இது குறித்து பின் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ், “விசைப்படகு சேதமடைந்ததற்கு ரூ.5 லட்சம கேட்டு மனு கொடுத்திருந்தேன். ஆனால் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. பல முறை மனு அளித்த பிறகும் எனக்கு நிவாரணத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தனர். தாமதமாக வழங்குகின்ற இந்த தொகையும் முழுமையாக கிடைக்கவில்லை என முதல்வரிடம் மனக் குமுறலை வெளிப்படுத்தி, திருப்பி ஒப்படைத்தேன்” எனத் தெரிவித்தார்.
முதல்வர் நிவாரணம் வழங்கும் நிகழ்வில், இவ்வாறு வாங்கிய காசோலையை முதல்வரிடமே திருப்பிக்கொடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு பற்றி உங்கள் கருது என்ன, கமெண்டில் சொல்லுங்க !