விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த சாரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த 15 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு, பரமக்குடி அரியாண்டிபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ராம்கி மற்றும் அவரின் குடும்பத்தினா், உறவினா்கள், சிறுவா், சிறுமியா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் வேனில் சென்று கொண்டிருந்தனர். முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த திருக்கண்ணன் (23) என்பவர் வேனை ஓட்டிச் சென்றார்.
வேன் திண்டிவனத்தை அடுத்த சாரம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது , ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேன் விபத்தில் ராம்கி மற்றும் உறவினா்களான குமாா் மகன் பிரணித் (7), நிஷிதா (13), தேஜாஸ்ரீ (8) உள்பட 14 போ் பலத்த காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.