திண்டிவனம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் பள்ளங்களில் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. ஏற்கனவே, பள்ளி வாகனங்கள் முதற்கொண்டு பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் நேற்று மேலும் பார் மண் ஏற்றி வந்த லாரி பாதாள சாக்கடை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
இவ்வாறு திண்டிவனம் பகுதியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாவது தொடர் கதையாகி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும் விபத்துக்கள் அல்லது உயிர் சேதம் ஏற்படும் முன் திண்டிவனம் நகராட்சி இந்த விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.