முகப்பு திண்டிவனம் திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் வைக்க வாக்குவாதம்

திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் வைக்க வாக்குவாதம்

திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,... வாக்குவாதம்

by Tindivanam News

திண்டிவனம் மக்களின் பல ஆண்டுகால கனவாக இருந்த திண்டிவனம் பேருந்து நிலையம் தற்போது ஒருவழியாக கட்டிமுடிக்கப்பட்டு, ஒரு சில நாட்களில் திறந்து வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், புதியதாக திறக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு, கருணாநிதி, ஓ.பி.ஆர்., மற்றும் அண்ணாதுரை என யார் பெயரை வைப்பது என தி.மு.க., – அ.தி.மு.க.,வினரிடையே நகர மன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. திண்டிவனம் நகர மன்றத்தில் சாதாரண கூட்டம் காலை 11:00 மணியளவில் நடந்தது. கூட்டத்தில் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கமிஷனர் பழனி (பொறுப்பு), நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் துவங்கியதும் கவுன்சிலர் ரவிச்சந்திரன், திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் புதியதாக திறக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு, ‘கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்க வேண்டும் என தி.மு.க.,மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் சார்பில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு தி.மு.க.,கவுன்சிலர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இருப்பினும், தி.மு.க.,வை சேர்ந்த 17 வது வார்டு கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன், தி.மு.க., சார்பில் பவள விழா கொண்டாடும் நேரத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பெயரை சூட்ட வேண்டும் எனக் கூறி கோரிக்கை மனுவை நகர மன்ற தலைவரிடம் கொடுத்தார்.

இதற்கிடையில், நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதத்தை மேற்கொள்காட்டி, புதிதாக திறக்கப்படும் பஸ் நிலையத்திற்கு, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் சின்னசாமி, பார்த்திபன், பாபு உள்ளிட்டவர்கள் நகராட்சி சார்பில் திறக்கப்படும் பஸ் நிலையத்திற்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என தி.மு.க., கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும்; ஓ.பி.ஆர்.பெயரை வைக்க வேண்டும் என்று கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஏற்க கூடாது என கோரிக்கை வைத்தனர்.

  திண்டிவனம் ராஜாங்குளம் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

அதனைத் தொடர்ந்து, நகரமன்ற தலைவர், புதிய பஸ் நிலையத்திற்கு ‘கருணாநிதி நுாற்றாண்டு பேருந்து நிலையம்’ என வைக்கப்படும் எனவும், ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியதாகவும் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் ஜனார்த்தனன், கார்த்தி, சரவணன், திருமகள் ஆகியோர் தீர்மானத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தரவில்லை. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினர். தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேரும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இறுதியில், புதிய பஸ் நிலையத்திற்கு மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில், ஆளுங்கட்சி கொண்டு வந்த தீர்மானம் 25 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அ.தி.மு.க.,மற்றும் பா.ம.க., கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole