கடலூரில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்தில் 60 பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அரசு பேருந்து ஒலக்கூர் அடுத்து கூச்சி குளத்தூர் கூட்டு சாலையில் சென்றபோது நிலைதடுமாறி நெடுஞ்சாலை நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக, இந்த பேருந்தில் பயணித்த அனைவரும் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டிவனம் அடுத்த பாதிரி அருகே கூச்சிகுளத்தூர் கூட்டு சாலையைக் கடக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து, சாலையின் தடுப்பு கட்டையின் மீது ஏறி நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், பேருந்து சாயும்போது வெளியேறும் வழி இருக்கும் பக்கம் சாயாமல், மாற்றுப்பக்கம் சாய்ந்ததால் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினார்.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பலத்த காயங்கள் எதுவும் இல்லமால் உயிர் தப்பினர். இதுகுறித்து, தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் பயணிகளை மீட்டு மாற்று பேருந்தில் ஏற்றி தாம்பரம் அனுப்பி வைத்தனர். பின்பு, விபத்தில் சிக்கி சேதமடைந்த பேருந்தை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது.