திண்டிவனம் பகுதியை சுற்றி பல பள்ளி கல்லூரிகள் இயங்கிவருகின்றன. காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இருப்பினும், அதிக கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். அதன்காரணமாக மேலும் கூடுதல் பஸ்களை இயக்கக் கூறி மாணவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், பள்ளி, கல்லுாரி செல்லும் நேரங்களில் போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், நேற்று திண்டிவனத்திலிருந்து செஞ்சிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை, கல்லுாரி மாணவர்கள் வலுக்கட்டாயமாக கல்லுாரிக்கு கொண்டு சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 9:30 மணியளவில் திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் தடம் எண். 40 என்ற அரசு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. இந்த, பஸ் அரசு கல்லுாரிக்கு செல்லாத நிலையிலும், கல்லுாரியைச் சேர்ந்த 20க்கு மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். பின்பு, செஞ்சி பஸ் நிறுத்தம் வந்தபோது, மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பஸ்சை செஞ்சிக்கு ஓட்டிச்செல்லும் முன், தங்களை கல்லுாரியில் விட்டுச் செல்ல வேண்டும் என்று தகராறு செய்தனர்.
அதற்கு ஒருவரும், பயணிகளுடன் செஞ்சிக்குச் செல்லும் பஸ்சை எப்படி கல்லுாரிக்கு ஓட்டிச்செல்ல முடியும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார், எனினும் மாணவர்கள் தொடர்ந்து அடம்பிடித்தனர்.
கல்லுாரி மாணவர்களின் நெருக்கடியாலும், அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து பாதிப்பாலும், செஞ்சிக்கு செல்ல வேண்டிய பஸ்சை, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரிக்குச் ஓட்டிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.