விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு, மகன் கார்த்திக் (21). இவர், திண்டிவனம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கார்த்திக் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கு முன்பும் பலமுறை இது போன்று “ஐ அம் வெயிட்டிங் ஃபார் மை டெத்” என்று கார்த்திக் ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது நண்பர்களும் உறவினர்களும் பெரிதாக இந்த முறை கண்டுகொள்ளவில்லை.
இந்த முறையும் இவ்வாறு ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கார்த்திக் வீட்டில் வழக்கம் போல் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் நீண்ட நேரமாக வீட்டில் காணவில்லை என்பதால் அவரது பெற்றோர் தேடும் பொழுது அருகில் உள்ள கிணற்றில் கார்த்திக் சடலமாக கிடந்துள்ளார். இந்த விஷயம் அறிந்து பெரிய தச்சூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் கார்த்திக்கின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கல்லூரி மாணவர் whatsapp ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.