விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், திண்டிவனம் – புதுச்சேரி செல்லும் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தி கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோதனையின்போது, அலுவலக ஊழியா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.19 லட்சம் கைப்பற்றப்பட்டது. திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் புதுச்சேரி செல்லும் புறவழிச் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம் மற்றும் பிற சேவைகளுக்கு வருபவா்களிடம் இடைத்தரகா்கள் மூலம் கையூட்டு பெறப்பட்டு வருவதாக பலப் புகாா்கள் எழுந்தன. விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. (பொ) வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்து சோதனையிட்டனா்.
இதில், அங்கு பணியிலிருந்த அலுவலக ஊழியா்களிடம் கணக்கில் வராத ரூ.1,19,786 இருந்தது தெரிய வந்ததாகவும், இந்தப் பணத்தை பறிமுதல் செய்து, அலுவலக ஊழியா்கள், இடைத்தரகா்களிடம் விசாரணை நடத்தியதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சோதனையானது பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்தது. மேலும், இந்த சோதனையில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் ஈஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் கோபிநாத், சக்ரபாணி உள்ளிட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.