திண்டிவனத்தில் உள்ள சேடங்கூட்டை பகுதியில் தனியார் மொபைல் நிறுவனம் சில மாதங்களாக செல்போன் டவர் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் அப்பகுதியில் வாழும் மக்கள் செல்போன் டவர் அமைத்தால் கதிர்வீச்சினால் உடல்நிலை பாதிக்கும் என தெரிவித்ததால் டவர் அமைக்கும் முயற்சி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த தனியார் நிறுவனம் முறைப்படி நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதிப்பெற்று தனியாருக்கு சொந்தமான இடத்தில் மறுபடியும் செல்போன் டவர் அமைக்க உபகரணங்களை கொண்டு வந்து இறக்கி வேலைகளை துவங்கியது. செல்போன் டவர் அமைக்க போலீசார் தலைமையில் கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் விழுப்புரம் மாவட்ட பா.ம.க கட்சி செயலாளர் ஜெயராஜ் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் டவர் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எதிர்ப்பை மீறி டவர் அமைத்தால் சாலை மறியல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி பொது மக்களிடம் சமாதானம் செய்ய முயற்சித்தனர். இது சம்பந்தமாக திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என பின்பு தெரிவித்துச் சென்றனர். ஆதலால், மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.