திண்டிவனம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதையை ரயில்வே நிர்வாகம் மரங்களை வெட்டிப்போட்டு அடைத்துள்ளதால் ரயில் பயணிகள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் ரயில் நிலையத்திற்குச் செல்ல மேம்பாலம் அருகே பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதுமட்டுமின்றி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் காவேரிப்பாக்கம் தரைப்பாலம் வழி என 3 வழிகள் உள்ளது. இந்த 3 வழியையும் ரயில் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இதில், காவேரிப்பாக்கம் தரைப்பாலம் வழியை நகர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். அந்த வழியில் அப்பகுதியைச் சேர்ந்த பலர், குப்பைக் கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வந்தனர். அதுமட்டுமின்றி அந்தப்பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்கள், வழிப்பறி சம்பவங்கள், கஞ்சா விற்பனை போன்றவைகள் இரவு நேரத்தில் நடந்து வந்தது. இது குறித்து ரயில்நிலைய மேலாளர், நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தார். அதன் பேரில் நேற்று முதல் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்த வழியை, ரயில்வே நிர்வாகம் மரங்களை வெட்டிப்போட்டு அதிரடியாக மூடியது. இதனால் நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் ரயில் நிலையத்திற்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தகவல் : தினமலர்