திண்டிவனம் நகரப் பகுதியின் பிரதான நீராதாரமாக திண்டிவனம் ராஜாங்குளம் இருந்து வருகிறது. மழைக்காலங்களில் மேல்பாக்கம் ஏரியிலிருந்து நிரம்பி வழியும் மழை நீர் அய்யன்தோப்பு, மாரிச்செட்டிகுளம் வழியாக வெள்ளவாரி வரத்து வாய்க்கால் மூலம் ராஜாங்குளத்திற்கு வந்தடையும். இந்த வருடமும் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் ராஜாங்குளத்திற்கு சரியாக நீர் வந்தடையவில்லை. இதற்கு வெள்ளவாரி வாய்க்கால் பகுதியில் அடைத்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், ஆகாய தாமரைச் செடிகள்தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது சம்பந்தமாக நகராட்சிக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். இதனால் நிரம்பி வழியும் நீர் கிடங்கல் ஏரி பகுதிக்குச் சென்று அங்கிருந்து நாகலாபுரம் வழியாக கடலில் கலந்து வீணாகும் நிலை உள்ளது. ஆகையால், ராஜாங்குளம் வரத்து வாய்க்காலில் உள்ள கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், ஆகாய தாமரைகள் சரியாக தூர்வாரப்பட்டு நீர்வரத்தை மேம்படுத்த அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவ்வாறு துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரும் காலங்களில் திண்டிவனம் நகரப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் தண்ணீர் பிரச்சினைகள் வராமல் தடுக்க இயலும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.