விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர் கிராமத்தில் காலாண்டுத் தேர்வு சரியாக எழுதவில்லை என பத்தாம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் வட்டம், வீடூா் ஆனந்தம்பேட்டை தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன், இவரின் மகன் புகழேந்தி (16) வீடூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வந்தது. இந்தநிலையில், மகன் புகழேந்தி காலாண்டுத் தோ்வை சரியாக எழுதவில்லை என தன் அம்மா சங்கீதாவிடம் கூறி வருத்தப்பட்டாராம்.
பின்பு, கடந்த மாதம் 29-ஆம் தேதி தங்களுக்கு சொந்தமான நிலத்துக்குச் சென்ற புகழேந்தி, விஷம் குடித்து மயங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அவரை குடும்பத்தினா் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்பு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் புகழேந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புகழேந்தி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.