திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவில் பகுதியில் சுப்பையா மனைவி வீரம்மாள் வசித்து வருகிறார். இவர் திண்டிவனம் மின்துறை அலுவலகத்தில் ஊழியராக பணி செய்து வந்தார். தற்போது இவரது வீட்டில் மின்சாரம் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இது சம்பந்தமாக மின்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள் வீரம்மாளின் வீட்டில் சோதனை நடத்தி மின்சாரம் திருட்டு நடைபெற்றதை உறுதி செய்தனர். மேலும், இது சம்பந்தமாக பிரம்மதேசம் மின்துறை உதவி பொறியாளர் ராஜராஜன் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மின்சாரம் திருட்டு சம்பவம் தொடர்பாக வீரம்மாளை திண்டிவனம் மின்சாரவாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மின்வாரியத்தில் பணி செய்யும் ஊழியரே மின் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.