விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி சாலையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மயானக் கொள்ளை விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மதியம் சுமார் 12 மணியளவில் அங்காளம்மன் மகிஷாசூர சம்ஹார அலங்காரத்தில் மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டார். பக்தர்கள் காளி வேடமணிந்து ஆடிப்பாடி கலந்து கொண்டனர்.
ஊர்வலம் மயானத்தை சென்றடைந்ததும், அங்கு காய்கறி மற்றும் தானியங்கள் இறைத்து மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த ஆண்டு மயானக் கொள்ளை நிகழ்ச்சியின் போது, காமாட்சியம்மன் கோவில் வீதியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே அரசியல் கட்சிகள் கொடி ஏந்திய விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் ஊர்வலத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்றும், மாலை 5 மணிக்குள் ஊர்வலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் போலீசார் கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர்.
ஆனால், சிலர் கட்சிக் கொடிகளை ஏந்தியபடி ஆட்டம், பாட்டுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாலை சுமார் 5.10 மணியளவில் காமாட்சியம்மன் கோவில் தெருவில் பா.ம.க.வினர் மேளதாளத்துடன் வந்தபோது, டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையிலான போலீசார் ஊர்வலத்தை நிறுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் பா.ம.க.வினரும் போலீசாரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.
இந்த தடியடியில் ஒரு பெண் உட்பட மூவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.