திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கவிராஜ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சொந்த வேலை காரணமாக திண்டிவனம் நோக்கி தனது பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரும் உடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, சாரம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆடு ஒன்று குறுக்கிட்டது. அந்த ஆட்டின் மீது மோதாமல் இருக்க கவிராஜ் தனது பைக்கில் பிரேக் போட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அனீஸ் குமார் தனது காரை பைக்கின் பின்னால் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சாலையில் விழுந்தனர். மோதிய வேகத்தில் காரில் இருந்த பாதுகாப்பு பலூன் திறந்ததால் மேலும் வாகனத்தை இயக்கிய அனீஸ் குமாரின் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கவிராஜ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு போக்குவரத்தைச் சரி செய்தனர். இதனால் சாரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.